search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப் பிரதேஷ்"

    அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
    உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும்வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்து உடலை அடையாளம் கண்ட ஸ்ரீகேஷின் மைத்துனி மதுபாலா மற்றும் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை மதுபாலா கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை எடுத்து சோதித்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், "ஸ்ரீகேஷ் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை ஃப்ரீசரில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும்" என்று மதுபாலா கூறினார்.

    இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது:-

    படுகாயங்களுடன் வந்த ஸ்ரீகேஷை அவசரப் பிரிவு மருத்துவர்கள் அதிகாலை 3 மணியளவில் பரிசோதித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. அவரை பலமுறை பரிசோதித்த பிறகே, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கிறோம். தற்போது அவரது உயிரைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முதல்வேலை.

    இது அரிதிலும் அரிதான நிகழ்வு. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×